செண்டோசா தீவு

0 Comments

ஒரு இடம் மறக்க முடியாத ஒன்றாக நம் மனதில் பதிய வேண்டும் எனில் அது நம் காதல் சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும் இல்லை கண்ணீர் சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும் அதுவும் இல்லையென்றால் மகிழ்ச்சியான தருணம் ஏதோ ஒன்றில் மனம் அங்கே சிக்கி இருக்க வேண்டும். ஒரு அச்ச உணர்வோடு வாழ்வில் அடுத்த படி என்னவென்றே தெரியாமல் படியின் அடியில் தான் இருக்கிறோமா என்று கூட அறியாமல் சொந்த நாட்டிலும் இல்லாமல் மனைவியின் கையைப் பிடித்துக்கண்டு மலேசியா சிங்கப்பூர் என பஸ்ஸிலும் ரயிலிலும் மாறிமாறி விசா கூட இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த போது ஓரிடம் எல்லா கவலைகளையும் மறந்து ஒரு எட்டு மணி நேரத்திற்கு தன்னைத் தவிர வேறு எதையும் நினைக்காதவண்ணம் என்னை பார்த்துக் கொண்டது அதுதான் சென்டோசா ஐலேண்ட்

அந்த இடத்தில் இரண்டு விஷயங்களைசெய்ய முடியுமாய் நான் பார்த்தேன் ஒன்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யமுடியும் இரண்டு நேரத்தை தண்ணீரில் மட்டுமே செலவு செய்ய முடியும்.உண்மையாகவே எத்தனை கோடியுடன் சென்றாலும் உன்னை வரவேற்கும் ஒரு ரூபாய் கூட இல்லாமல வருவோரையும் அதே அழகோடு வரவேற்கும் ஒரு கம்யூனிச தீவு. கம்யூனிசம் அங்கிருக்கும் மக்களுக்கு தெரியாது அந்த தீவுக்கு தெரியும் ஒருவேளை இந்த இருவேறு முனைகளும் இரண்டற கலந்திருந்ததால்தான் அந்த இடம் எனக்கு ஏனோ அவ்வளவு பிடித்துப் போயிற்று

அப்போது என் மனைவி வேலை பார்த்தது மலேசியாவில் சம்பளம் பெறுவது சிங்கப்பூரில் எனக்கோ விசா இல்லை டூரிஸ்ட் விசாவில் 30 நாட்கள் மட்டுமே மலேசியாவில் இருக்க முடியும் முப்பது நாட்கள் முடிந்தவுடன் ஒருமுறை நாட்டை விட்டு வெளியேறி விட்டு திரும்ப வர வேண்டும் ஒரு முறை இப்படி செய்யலாம் இரு முறை இப்படி செய்யலாம் மூன்றாவது முறை இமிகிரேஷன் கண்டுபிடித்தால் ஒன்றுமே பேசாமல் உள்ளே வைத்து விடுவார்கள் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடம் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் காலையில் ரயிலில் வந்து விட்டு மாலையில் பஸ்ஸை பிடித்து செல்லவேண்டும் உடனுக்குடனே திரும்பினால் கண்டுபிடித்துவடுவார்கள் என்பதற்காக சம்பளப் பணத்தை எடுக்கும் வரை சிட்டி பேங்க் அருகில் இருக்கும் ஒரு மால் வாசலில் காத்திருப்போம் வங்கி திறந்தவுடன் பணத்தை எடுத்துக்கொண்டு நேராக சென்டோசா சென்று விடுவோம் எட்டு மணி நேரம் கடிக்க குடிக்க புசிக்க என சேர்த்து பத்து ரூபாய் மன்னிக்கவும் 10 டாலருக்கு பார்சல் வாங்கிக்கொண்டு செண்டோச தீவிற்கு காலை 11 மணிக்கு நுழைந்தால் கடைசி பஸ் 8 மணிக்கு சிங்கப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும் அதுவரை அந்த தீவிலேயே இருப்போம்.சைனா கொரியா போன்ற நாடுகளிலிருந்து வரும் சரக்கு கப்பல்கள் அனைத்தும் அந்த சென்டோசா கரையில் இருந்து பார்க்கும் பொழுது மிக அருகில் தெரியும் ஒவ்வொரு முறை அந்த தீவிற்கு செல்லும் போதெல்லாம் ஒரு ஏக்கத்துடன்அந்த கப்பல்களைப் பார்த்து கொண்டு அமர்ந்திருப்பேன் என்றாவது ஒருநாள் நாமும் இக்கப்பலில் பொருள் எடுத்து வணிகம் செய்ய வேண்டும் என்ற ஏக்கம் உள்ளுக்குள் நிலையாய் ஓடிக்கொண்டே இருக்கும்

பிறகு ஒரு வருடம் கழித்து நிரந்தர விசாவுடன் மலேசியாவிலேயே தங்கும் வாய்ப்பு அமைந்துவிட்டது அதன் பிறகு என் மனைவி நிரந்தர வேலையில் சேர்ந்தாள். நானும் தொழில் செய்தேன். பொருளாதாரத்தில் நல்ல நிலைமைக்கு வந்தோம் அழகான குடும்பம் உருவாயிற்று கிட்டத்தட்ட ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சுற்றுலா சென்று விட்டோம் ஏனோ தெரியவில்லை எவ்வளவோ வாய்ப்பிருந்தும் ஒரே ஒருநாள் இருந்தால் கூட போய் வரலாம் என்று இருந்தும் சென்டோசா மட்டும் அதற்குப்பின் போகவே இல்லை. அந்த ஒரு தீவிற்குத்தான் நான் நன்றி மறந்தவனானேன் …

Categories:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *